×

வனவிலங்குகளின் பாதுகாப்பு கருதி களக்காடு மலையடிவாரத்தில் 9 மீட்டர் உயரமுள்ள 28 மின்கம்பங்கள் அமைப்பு; மின்சார வாரியம் நடவடிக்கை

களக்காடு: வனவிலங்குகளின் பாதுகாப்பு கருதி களக்காடு மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில் 9 மீட்டர் உயரத்தில் 28 மின் கம்பங்கள் புதிதாக அமைக்கப்பட்டுள்ளது. மேற்கு தொடர்ச்சி மலையை ஓட்டிய விளைநிலங்களில் காட்டுபன்றிகள், யானை, கரடி, மிளா, மான் உள்ளிட்ட வனவிலங்குகள் வராமல் இருக்க விவசாயிகள் சிலர் அனுமதி இல்லாமல் மின்வேலியை அமைக்கின்றனர். அவ்வாறு கடந்த மார்ச் 7ம் தேதி தர்மபுரி மாவட்டம் மாரஹண்டபள்ளி அருகே காளி கவுண்டனூர் பகுதியில் உள்ள சக்தி என்பவர் தோட்டத்தில் சட்ட விரோதமாக அமைக்கப்பட்டுள்ள மின்வேலியில் சிக்கி 3 யானைகள் பரிதாபமாக உயிரிழந்தது. கடந்த மார்ச் 18ம் தேதி பாலக்கோடு அருகே கம்பைநல்லூர் அடுத்த கெலவள்ளி அருகே உள்ள ஏரிக்கரையில் ஏற முயன்ற ஆண் யானை ஒன்று அங்கு தாழ்வாக இருந்த உயர் அழுத்த மின்பாதையில் சிக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தது.

கடந்த மார்ச் 25ம் தேதி கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் அருகே பூச்சியூர் அருகே ஆண் யானை ஒன்று மின்கம்பத்தில் மோதி மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தது. இந்நிலையில் கடந்த 9ம் தேதி சிவகிரி அருகே கரும்பு தோட்டத்தில் அமைக்கப்பட்டிருந்த மின்வேலியில் காட்டு யானை சிக்கி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் வனத்துறையினர் மட்டுமின்றி வன ஆர்வலர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையே யானைகளின் தொடர் மரணங்களை அடுத்து வனவிலங்குகள் பாதிக்கப்படாதவாறு மின்பாதைகளுக்கு கீழே செல்லும் மின்கம்பங்களை உயர்த்த நடவடிக்கை எடுக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார். இதையடுத்து மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, மேற்கு ெதாடர்ச்சி மலையடிவாரத்தில் உள்ள மின்கம்பங்களின் உயரத்தை அதிகரிக்கும் வகையில் நேரில் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க மின்வாரிய அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினார்.

அதன்படி நெல்லை மாவட்டம் களக்காடு புலிகள் காப்பகத்திற்குட்பட்ட தலையணை மலையடிவாரத்தில் வனத்துறையினரும், மின்வாரிய ஊழியர்களும் இணைந்து மின் பாதைகளில் ஆய்வு மேற்கொண்டனர். அதன் தொடர்ச்சியாக தலையணை வனப்பகுதி மற்றும் மலையடிவாரத்தில் தாழ்வழுத்த மின்பாதையில் பூமிக்கும் மின்பாதைக்கும் இடையில் உள்ள உயரத்தை அதிகரிப்பதற்காக, ஏற்கனவே உள்ள 7.5 மீட்டர் உயரமுள்ள மின்கம்பங்களை அகற்றிவிட்டு புதிதாக 9 மீட்டர் உயரமுள்ள மின்கம்பங்கள் அமைக்கப்பட்டது. இதுபோல 2 மின்கம்பங்களுக்கும் இடையில் உள்ள தூரத்தை குறைப்பதற்கும் மொத்தம் 28 மின் கம்பங்கள் நடப்பட்டு பணிகள் முடிக்கப்பட்டு மின் பாதைகளின் உயரம் அதிகரிக்கப்பட்டது.

The post வனவிலங்குகளின் பாதுகாப்பு கருதி களக்காடு மலையடிவாரத்தில் 9 மீட்டர் உயரமுள்ள 28 மின்கம்பங்கள் அமைப்பு; மின்சார வாரியம் நடவடிக்கை appeared first on Dinakaran.

Tags : Kalakadam ,Kalakkadam ,Kalakadam West Continuous ,Dinakaran ,
× RELATED களக்காடு அருகே பரபரப்பு வீடுகளில்...